நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை - தோல்வி குறித்து ஹர்மன்ப்ரீத் கவுர் கருத்து


நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை - தோல்வி குறித்து ஹர்மன்ப்ரீத் கவுர் கருத்து
x

Image Courtesy: @BCCIWomen

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

துபாய்,

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 58 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியை தழுவியதால் அரையிறுதிக்கு முன்னேற எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இன்று நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. இனி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். நாங்கள் விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புகளை ஏற்படுத்தினோம். ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் நியூசிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள்.

அதில் எந்த சந்தேகமும் இல்லை. பீல்டிங்கில் நாங்கள் சில தவறுகளை செய்து விட்டோம். எனவே இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இனி வரும் போட்டிகளில் அதை சரி செய்ய வேண்டும். 160 ரன்கள் என்ற இலக்கை நாங்கள் பலமுறை வெற்றிகரமாக சேஸ் செய்து இருக்கிறோம். எனவே இந்த ஆட்டத்திலும் நாங்கள் அதை வெற்றிகரமாக எட்டுவோம் என்று தான் நினைத்தேன்.

இந்த போட்டியில் யாராவது ஒரு வீராங்கனை நிலைத்து நின்று ஆடி இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டோம். எங்கள் அணியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் மீண்டு வருவோம். நான் எதிர்பார்த்த தொடக்கம் இதுவல்ல. ஆனால் இந்த கட்டத்தில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story