'குஜராத்தை பழிதீர்த்து விட்டோம்' - ராஜஸ்தான் வீரர் ஹெட்மயர் மகிழ்ச்சி
முந்தைய தோல்விகளுக்கு குஜராத்தை வீழ்த்தி பழிதீர்த்து விட்டோம் என்று ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர் தெரிவித்தார்.
ஆமதாபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை தனதாக்கியது. இதில் முதலில் ஆடிய குஜராத் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் (60 ரன்கள்), ஹெட்மயர் (56 ரன்கள், நாட்-அவுட்) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. 26 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 56 ரன்கள் திரட்டிய ஹெட்மயர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தோல்வி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருத்து தெரிவிக்கையில்,
'உண்மையாக சொல்ல வேண்டுமானால் 'பவர்-பிளே'யில் நாங்கள் கண்ட நல்ல தொடக்கம் காரணமாக இந்த ஆட்டத்தில் தோல்வி அடைவோம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் எந்தவொரு நேரத்திலும் ஆட்டத்தின் போக்கு மாறும். அது தான் 20 ஓவர் போட்டியின் தனிச்சிறப்பாகும். கடைசி பந்து வீசி முடிக்கப்படும் வரை ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த ஆட்டம் எங்களுக்கு மற்றொரு பாடமாகும்' என்றார்.
வெற்றிக்கு பிறகு ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர் கூறுகையில்,
'மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. குஜராத் போன்ற அணியை வீழ்த்துவது எளிதான விஷயம் கிடையாது. குஜராத் அணி எங்களை கடந்த ஆண்டு தொடரில் மூன்று முறை வீழ்த்தியிருந்தது. அதற்கு எல்லாம் சேர்த்து நாங்கள் இந்த போட்டியில் பழி தீர்த்துவிட்டோம்.
இலக்கை விரட்டும் போது, சில விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்தால் கடைசி 8 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலை உருவாகும். இது போன்ற கடினமான சூழலை சமாளிப்பது எப்படி என்பதை மனதில் நினைத்து கொண்டு அதற்கு ஏற்ப பயிற்சியில் ஈடுபட்டேன். நான் எடுத்த அத்தகைய பயிற்சிக்கு பலன் கிடைத்துள்ளது' என்றார்.