உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் பிரேசர் 29 பந்தில் சதம் அடித்து சாதனை
உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் பிரேசர் 29 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் மார்ஷ் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடந்து வருகிறது. இதில் அடிலெய்டில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியா- தாஸ்மானியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தாஸ்மானியா 9 விக்கெட்டுக்கு 435 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். அடுத்து களம் இறங்கிய தெற்கு ஆஸ்திரேலியா 46.4 ஓவர்களில் 398 ரன்னில் ஆல்-அவுட்டாகி தோல்வியை தழுவியது.
தெற்கு ஆஸ்திரேலியா வீரர் ஜேக் பிரேசர் மெக்குர்க் 125 ரன்கள் (38 பந்து, 10 பவுண்டரி, 13 சிக்சர்) விளாசினார். அவர் 29 பந்துகளில் சதத்தை எட்டி உலக சாதனை படைத்தார். லிஸ்ட் 'ஏ' வகை கிரிக்கெட்டில் (உள்ளுர் மற்றும் சர்வதேசம் சேர்த்து) இது தான் அதிவேக சதமாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் சதம் அடித்ததே மின்னல் வேக சதமாக இருந்தது. அதை 21 வயதான பிரேசர் தகர்த்துள்ளார்.