டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷனுக்கு பதில் அவரை தொடக்க ஆட்டக்காரராக ஆட வையுங்கள் - வாசிம் ஜாபர் கருத்து
வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா இடையிலான 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
டிரினிடாட்,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷனுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரராக ஆட வைக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இது குறித்து வாசிம் ஜாபர் கூறியதாவது,
ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் தொடர்ச்சியாக 3 அரைசதம் அடித்து தன்னை நிரூபித்து இருந்தாலும் என்னை பொறுத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20-ல் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும்.
ஏனெனில் டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை இஷான் கிஷன் சற்று மோசமாகவே விளையாடி வருகிறார். அவரது பார்ம் எனக்கு வருத்தத்தை தந்துள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 15 இன்னிங்சில் ஒருமுறை கூட 40 ரன்கள் தொடவில்லை. அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மிக குறைவாக உள்ளது.
இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும். ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரின்போது அச்சமற்ற, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோன்று நிச்சயம் இந்திய அணிக்காகவும் அசத்துவார் என்று நம்புகிறேன். எனவே அவருக்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.