டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி விராட் கோலியிடம் இருந்தது - ஹர்பஜன்
தம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா? என்று சந்தேகத்துடன் விராட் கோலி இருந்ததாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வரும் அவர், இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
கடந்த 2008 அண்டர்-19 உலகக்கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்த விராட் கோலி தம்முடைய திறமையால் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இருப்பினும் மற்றவர்களைப் போலவே ஆரம்ப காலங்களில் விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் தடுமாறினார்.
குறிப்பாக தம்முடைய அறிமுகத் தொடரிலேயே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 4, 15, 0, 27, 30 என வெறும் 76 ரன்களை மட்டுமே எடுத்தார். அப்போது தம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா? என்று சந்தேகத்துடன் விராட் கோலி இருந்ததாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அப்போது உங்களிடம் உள்ள திறமைக்கு 10,000 ரன்கள் அடிக்கவில்லை என்றால் அது உங்களது தவறு மற்றும் அவமானம் என்று சொன்னதாக ஹர்பஜன் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் வெஸ்ட் இண்டீஸில் இருந்தோம். அந்த சுற்றுப்பயணத்தில் விராட் கோலியை ஷார்ட் பந்துகளை வீசி பிடல் எட்வர்ட்ஸ் அதிகமாக தொல்லை செய்தார். அவரிடம் விராட் கோலி மீண்டும் மீண்டும் அவுட்டானதால் ஏமாற்றமடைந்தார். மேலும் நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியுமா? என்ற சந்தேகம் அவரிடம் இருந்தது.
அப்போது அவரிடம் '10000 ரன்கள் அடிக்காவிட்டால் உங்களுக்கு நீங்களே அவமானப்படுங்கள். உங்களிடம் அந்த திறமை இருக்கிறது. ஒருவேளை நீங்கள் அதை செய்யாவிட்டால் அது உங்களுடைய தவறு' என்று சொன்னேன்" என கூறினார்.