புகழ், அதிகாரம் வந்தும் ரோகித் சர்மா மாறவில்லை... ஆனால் விராட் கோலி... - அமித் மிஸ்ரா ஆதங்கம்


புகழ், அதிகாரம் வந்தும் ரோகித் சர்மா மாறவில்லை... ஆனால் விராட் கோலி... - அமித் மிஸ்ரா ஆதங்கம்
x

முதல் முறையாக சந்தித்தபோது ரோகித் சர்மா எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே இருப்பதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

அதில் ரோகித் சர்மா களத்தில் பொறுமையாக இருந்து பேட்டிங்கில் அதிரடியாக செயல்படக்கூடியவர். அதிரடியாக விளையாடி எதிரணிகளை பந்தாடுவதில் வல்லவரான அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர். மறுபுறம் அதற்கு நேர்மாறாக விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர். ஆனால் பேட்டிங்கில் மிகவும் நங்கூரமாக விளையாடக் கூடிய அவர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ரன்கள் குவித்து அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் முதல் முறையாக சந்தித்தபோது ரோகித் சர்மா எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே இருப்பதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஆனால் புகழ், அதிகாரம் வந்ததும் தம்மிடம் விராட் கோலி பேசுவது கூட கிடையாது என அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு:- "நான் பொய் சொல்ல மாட்டேன். ஒரு கிரிக்கெட் வீரராக அவரை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் சச்சின் அல்லது தோனிக்கு நிகராக வைத்திருந்த அதே மதிப்பை இப்போதும் நான் கொண்டிருக்கவில்லை. ஏன் விராட் கோலி குறைந்த நண்பர்களைக் கொண்டுள்ளார்? விராட் மற்றும் ரோகித் ஆகியோரின் கேரக்டர் வித்தியாசமானது.

ரோகித்தின் சிறந்த விஷயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். அவரை முதல் நாள் பார்த்த போதும் இப்போது பார்த்த போதும் ஒரே நபராக இருக்கிறார். இந்திய அணியில் நான் நீண்ட வருடங்கள் இல்லை. ஆனால் இப்போதும் ரோகித்தை பார்க்கும்போது என்னுடன் அவர் கிண்டலாக பேசுவார். தற்போது உலகக்கோப்பை, 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள அவர் உயரே உள்ளார். ஆனால் நாங்கள் அதை நட்பை தொடர்கிறோம்.

இருப்பினும் விராட் நிறைய மாறியுள்ளதை பார்க்கிறேன். கிட்டத்தட்ட நாங்கள் இப்போது பேசுவதை நிறுத்திக் கொண்டோம். புகழும் அதிகாரமும் வரும்போது மக்கள் நம்மை வேண்டுமென்றே தொடர்பு கொள்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் நான் அப்படிப்பட்டவன் கிடையாது. சிக்குவை (விராட்) எனக்கு ஒவ்வொரு இரவும் சமோசா, பீட்சாவை சாப்பிட்ட 14 வயது முதல் தெரியும். ஆனால் அந்த சிக்குவுக்கும் சமீபத்திய கேப்டன் விராட் கோலிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இப்போதும் அவர் என்னை பார்க்கும்போது மதிப்பை வெளிப்படுத்துவார். ஆனால் அவர் அதே பழைய விராட் கோலி கிடையாது" என்று கூறினார்.


Next Story