விராட் மற்றும் ரோகித் இன்னும் 2 ஐ.சி.சி. தொடர்களில் விளையாடுவார்கள் - பி.சி.சி.ஐ. செயலாளர்
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சீனியர் வீரர்கள் கவனத்தை திருப்பியுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.
பார்படாஸ்,
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று சாதித்துள்ளது. இந்த போட்டிக்கு பின் இந்திய அணி வீரர்கள் கண்ணீருடன் கொண்டாடியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா மூவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் இந்திய அணி அடுத்த மாற்றத்திற்கு உருவாகி வருவதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சீனியர்களின் ரோல் என்னவாக இருக்கும், அடுத்த பயிற்சியாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெய் ஷா பேசுகையில், "இந்திய அணியின் முன்னேற்றத்தை மனதில் வைத்து அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதே இலக்காக நிர்ணயித்துள்ளோம். இரண்டு தொடர்களிலும் சீனியர் வீரர்களுடன் இணைந்து இளம் வீரர்கள் விளையாடுவார்கள். பெரியளவில் மாற்றம் இருக்காது. உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்த அதே கேப்டனின் கீழ் தான் இந்திய அணி பார்படாஸில் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியை தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் நாம் வென்றோம். ஆனால் இம்முறை இறுதிப்போட்டியையும் சேர்த்து வென்றுள்ளோம். இந்திய அணியை கவனித்தால், அனுபவ வீரர்களின் பங்கை நன்றாக உணர முடியும். ரோகித் சர்மா, விராட் கோலி அனைவரும் சரியான நேரத்தில் மிரட்டிவிட்டார்கள். உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் அனுபவம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். ஒரு நல்ல வீரருக்கு எப்போது குட் பை சொல்ல வேண்டும் என்பது தெரியும். அதனை நீங்கள் பார்த்தீர்கள்.
ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் இளம் வீரர்களை விடவும் அதிகமாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்திய அணி அனைத்து ஐசிசி தொடர்களிலும் வெற்றிபெற வேண்டும். இந்திய கிரிக்கெட்டில்தான் மிகப்பெரிய பெஞ்ச் வலிமை உள்ளது. தற்போதைய டி20 அணியில் இருந்து 3 வீரர்கள் மட்டுமே ஜிம்பாப்வே தொடருக்கு பயணிக்கிறார்கள். தேவைப்பட்டால் ஒரே நேரத்தில் 3 அணிகளை நம்மால் விளையாட வைக்க முடியும். ஏற்கனவே இந்திய அணி மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. 3 ஜாம்பவான் வீரர்கள் ஓய்வை அறிவித்துவிட்டனர்" என்று கூறினார்.