விஜய் ஹசாரே டிராபி; வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் அபார பந்துவீச்சு...மும்பை 227 ரன்கள் சேர்ப்பு..!
தமிழக அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ராஜ்கோட்,
விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் மற்றும் முதன்மை காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அரியானா, பெங்கால், ராஜஸ்தான், கேரளா, விதர்பா, கர்நாடகா, மும்பை, தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் 4வது காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - மும்பை அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய் கோகுல் பிஸ்தா மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா களம் இறங்கினர். இதில் ஜெய் கோகுல் பிஸ்தா 37 ரன்னிலும், திவ்யான்ஷ் சக்சேனா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹர்திக் தாமோர் 24 ரன்னும், கேப்டன் அஜிங்யா ரஹானே 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த பிரசாத் பவார் - ஷிவம் துபே இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் பிரசாத் பவார் அரைசதம் அடித்த நிலையில் 59 ரன்னிலும், ஷிவம் துபே 45 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் மும்பை அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 227 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளும், சித்தார்த், அபராஜித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி ஆட உள்ளது.