ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: ஆட்ட நாயகன் படிதார் கூறியது என்ன..?
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
ஐதராபாத்,
10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் மோதியது. இதில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 206 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 50, விராட் கோலி 51 ரன்கள் அடித்தனர் ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனத்கட் 3, நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் பெங்களூருவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். முடிவில் 20 ஓவர்களில் ஐதராபாத்தை 171 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பெங்களூரு 6 தோல்விகளுக்கு பின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
பெங்களூரு அணியின் இந்த வெற்றிக்கு வெறும் 20 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 50 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ரஜத் படிதார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் அதை வீட்டுக்கு சென்று பயிற்சிகளை எடுத்து சரி செய்து முன்னேறுவதாக ரஜத் படிதார் கூறியுள்ளார். மேலும் இப்போட்டியில் அதிகமாக சிந்திக்காமல் தம்மால் கட்டுப்படுத்த முடிந்ததை மட்டும் கட்டுப்படுத்தி பேட்டிங் செய்ததாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"நான் கட்டுப்படுத்தக் கூடியவற்றை கட்டுப்படுத்துவதற்கான விஷயங்களை மட்டும் என் மனதில் வைத்திருந்தேன். நீண்ட காலமாக நான் செய்ததை தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன். என்னுடைய மனநிலை மற்றும் பேட்டிங் டெக்னிக் ஆகியவை முக்கியம். நான் என்னுடைய வீட்டிற்கு திரும்பும் போதெல்லாம் அதில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயற்சிப்பேன். இன்று ஸ்பின்னர்கள் உட்பட எதிர்கொண்ட ஒவ்வொரு பவுலர்களையும் சிறப்பாக அடிப்பதற்கான வடிவம் எனக்கு கிடைத்தது" என்று கூறினார்.