வெங்கடேஷ் அதிரடி சதம்...கொல்கத்தா 185 ரன்கள் குவிப்பு...!


வெங்கடேஷ் அதிரடி சதம்...கொல்கத்தா 185 ரன்கள் குவிப்பு...!
x

Image Courtesy: @IPL 

கொல்கத்தா அணிக்காக 2008ம் ஆண்டில் சதம் அடித்த பிரண்டன் மெக்கல்லத்துக்கு பின்னர் சதம் அடித்த வீரரானார் வெங்கடேஷ் அய்யர்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்றைய முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துகிறார்.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மத்துல்லா குர்பாஸ், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 8 ரன், ஜெகதீசன் ரன் ஏதுமின்றியும் அவுட் ஆகினர். இதையடுத்து வெங்கடேஷ் அய்யர் மற்றும் நிதிஷ் ராணா களம் இறங்கினர்.

இதில் ராணா 5 ரன், அடுத்து வந்த ஷர்துல் தாகூர் 13 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து ரிங்கு சிங் வெங்கடேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் அய்யர் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். கொல்கத்தா அணிக்காக 2008ம் ஆண்டில் சதம் அடித்த பிரண்டன் மெக்கல்லத்துக்கு பின்னர் சதம் அடித்த வீரரானார் வெங்கடேஷ் அய்யர்.

சதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 51 பந்தில் 104 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ரஸல் களம் இறங்கினார். ரிங்கு சிங் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட உள்ளது.

1 More update

Next Story