டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி திருச்சி அபார வெற்றி
மதுரை அணி 16.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சேலம்,
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையான. இதில் டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அர்ஜுன் மூர்த்தி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷியான் சுந்தர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன வாசீம் அகமது ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
இதன்பின் வாசீம் அகமதுவுடன் சஞ்சய் யாதவ் கை கோர்த்தார். இருவரும் அதிரடியில் மிரட்ட அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
இவர்களின் அதிரடியால் திருச்சி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வாசீம் அகமது 90 ரன்களும், சஞ்சய் யாதவ் 60 ரன்களும் குவித்தனர். மதுரை தரப்பில் குர்ஜப்னீத் சிங் மற்றும் அலெக்சாண்டர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி மதுரை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஹரி நிஷாந்த் சிறப்பாக விளையாடி 39 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறினர். குறிப்பாக திருச்சியின் அபார பந்துவீச்சால் மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் மதுரை அணி 16.4 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. திருச்சி அணி சார்பில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ், ராஜ்குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.