டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையிடம் தோற்று வெளியேறியது திருச்சி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரையிடமும் தோல்வியை தழுவிய திருச்சி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், சேலம் அருகே உள்ள வாழப்பாடியில் நேற்றிரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியினர் மதுரையின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 18.5 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டனர். நடப்பு தொடரில் திருச்சியின் மோசமான ஸ்கோர் இதுவாகும்.
அந்த அணியில் ரோகின்ஸ் (18 ரன்), மணிபாரதி (48 ரன்), டேரில் பெராரியோ (21 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ, ராஜ்குமார் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். மதுரை தரப்பில் சரவணன் 3 விக்கெட்டும், குர்ஜப்நீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
அடுத்து களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. ஸ்வப்னில் சிங் (25 ரன், நாட்-அவுட்) சிக்சருடன் இன்னிங்சை முடித்து வைத்தார். அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 32 ரன்கள் எடுத்தார். 3 விக்கெட் வீழ்த்திய மதுரை அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சரவணன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
மதுரை 3-வது வெற்றி
முதல் இரு லீக்கில் தோற்ற முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் அதன் பிறகு தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். 6 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியான பால்சி திருச்சிக்கு இது 5-வது தோல்வியாகும். இதன் மூலம் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நாளை முதல் 12-ந்தேதி வரை நெல்லையில் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) நடக்கும் அடுத்த ஆட்டங்களில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் (பிற்பகல் 3.15 மணி), நெல்லை ராயல் கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.