இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக என்னுடைய மோசமான நாட்கள் அதுதான் - டிராவிட்


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக என்னுடைய மோசமான நாட்கள் அதுதான் - டிராவிட்
x

இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் குறித்து டிராவிட் பகிர்ந்துள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை இவர் செய்து வந்துள்ளார். டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை நீடித்து வந்தது. அந்த குறையையும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமாக பயிற்சியாளராக தனது பயணத்தை முடித்து இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செய்ய முடியாத சாதனையை, பயிற்சியாளராக செய்து ராகுல் டிராவிட் அசத்தியுள்ளார். 2007-ல் ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இம்முறை டிராவிட் பயிற்சியாளராக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் குறித்து டிராவிட் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "இந்திய அணியின் பயிற்சியாளராக எனது மோசமான நாட்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இருந்த போதுதான். ஏனென்றால் முதல் போட்டியில் வென்ற போதும், அடுத்த 2 போட்டிகளில் தோல்வியடைந்தோம். சில சீனியர் வீரர்கள் இல்லாததால், அந்த டெஸ்ட் தொடரை இழக்க வேண்டிய சூழல் நேரிட்டது.

அதேபோல் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிகளும் சாதகமாக அமையவில்லை. அதன் பலனாக டி20 உலகக்கோப்பையை வென்றோம். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததால், அனைத்து பலனையும் என்னால் எடுத்துக் கொள்ள முடியாது. இந்திய அணியை வழிநடத்தியது சீனியர் வீரர்கள் தான். ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, அஸ்வின் ஆகியோர் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர்" என்று கூறினார்.


Next Story