இந்த இளம் வீரர் விராட் கோலி போலவே விளையாடுகிறார் - ஆண்டி ப்ளவர் கருத்து


இந்த இளம் வீரர் விராட் கோலி போலவே விளையாடுகிறார் - ஆண்டி ப்ளவர் கருத்து
x

Image Courtesy: AFP 

இந்த இளம் வீரர் விராட் கோலி போலவே விளையாடுகிறார் என ஆண்டி ப்ளவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹராரே,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி கண்டது.

இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒரே நேரத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கலாம் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இப்படியான நிலையில் இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலத்தை பற்றி பயப்படத் தேவையில்லை என ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி ப்ளவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளரான பிறகு எல்லா வீரர்களையும் கவனிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. இந்த வகையில் நான் கவனித்ததில் 5 இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். ஜெய்ஸ்வால் டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் அவர் அருமையான வீரர்.

சுப்மன் கில்லுக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் சிறப்பாக அமையவில்லை என்றாலும், அவர் புத்திசாலித்தனமாக தெரிகிறார். அவர் விராட் கோலி போலவே விளையாடுகிறார். இதேபோல் நான் அபிஷேக் ஷர்மா எப்படி செயல்பட உள்ளார்? என்று பார்க்க விரும்புகிறேன். துருவ் ஜூரெல் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவரை நான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பார்த்தேன். அதில் மிகவும் சிறப்பாக விளையாடினார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கான திறன் ரியான் பராக்கிடம் இருக்கிறது. எனவே இந்த ஐந்து வீரர்கள் இந்திய எதிர்கால வீரர்களாக இருப்பார்கள். தற்போது இந்திய அணியில் ஓய்வு பெற்ற வீரர்கள் மிகவும் தரமான வீரர்கள். ஆனால் அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டில் இப்படியான வீரர்கள் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கான மாற்று (ரெடிமேடான) வீரர்கள் உள்ளனர்.

இந்தியாவின் கிரிக்கெட் உள் கட்டமைப்பு மிகவும் பலமானது. இந்தியா தொடர்ந்து ஜாம்பவான் வீரர்களை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு முறை பெரிய வீரர்கள் வெளியே செல்லும் பொழுது புதிய வீரர்கள் வந்து அந்த இடத்தை நிரப்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story