கம்பீர் - விராட் கோலி இணைந்து இதைத்தான் செய்வார்கள் - ஆஷிஷ் நெஹ்ரா


கம்பீர் - விராட் கோலி இணைந்து இதைத்தான் செய்வார்கள்  - ஆஷிஷ் நெஹ்ரா
x

image courtesy:AFP

விராட் கோலியும் கவுதம் கம்பீரும் எதிரெதிர் அணிகளில் இருந்தால்தான் மோதிக் கொள்வார்கள் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீரின் பதவிக்காலம் இந்த தொடருடன்தான் தொடங்க உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் பலமுறை ஐபிஎல் போட்டிகளின் போது கம்பீரும், விராட் கோலியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவங்களும், காரசாரமான வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட சம்பவமும் நடைபெற்றதால் இருவரும் ஒன்றாக இணைந்து எப்படி பணியாற்ற போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது.

இருப்பினும் இந்த ஐ.பி.எல். சீசனில் விராட் கோலியிடம் பேசிய கவுதம் கம்பீர் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலிக்கு மெசேஜ் செய்ததாக தெரிவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியும் கவுதம் கம்பீரும் எதிரெதிர் அணிகளில் இருந்தால்தான் மோதிக் கொள்வார்கள் என இந்திய முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ஆனால் ஒரே அணியில் அதுவும் நாட்டுக்காக விளையாடும்போது கண்டிப்பாக ஒன்றாக இணைந்து வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் மிகவும் ஆர்வமுள்ள 2 நபர்கள். தங்களுடைய அணிக்காக விளையாடும் போதெல்லாம் அவர்கள் எதிரணிக்கு எதிராக திரும்புவார்கள். ஒரே அணியில் இருக்கும்போது அவர்கள் அணிக்காக ஒன்றாக இணைந்து விடுவார்கள். விராட் கோலி 16 - 17 வருடங்கள் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். கவுதம் கம்பீரும் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார். வெளியில் பார்த்த சண்டைகளால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டிருப்பார்கள்.

சொல்லப்போனால் கம்பீர் - கோலி மட்டுமின்றி உலகின் பல வீரர்கள் களத்தில் சண்டை போட்டுள்ளனர். ஆனால் அதே வீரர்கள் நாளடைவில் ஒன்றாக ஒரே அணியில் நன்றாக விளையாடியுள்ளனர். கம்பீர் மிகவும் வெளிப்படையாக மனதில் உள்ளதை பேசுவார். அது மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக கேரியரில் தற்போதுள்ள நிலைமைக்கு விராட் - கம்பீர் ஆகியோரிடம் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.


Next Story