இந்த தொடரில் மோசமான தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் - சிக்கந்தர் ராசா வருத்தம்
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் ஜிம்பாப்வே இழந்தது.
ஹராரே,
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்ற நிலையில் அடுத்த 4 ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரை 1-4 என்ற கணக்கில் சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே இழந்தது.
அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான5-வது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் இந்த தொடரில் விளையாடிய விதம் குறித்தும், தோல்வி குறித்தும் வருத்தத்துடன் பேசியிருந்த சிக்கந்தர் ராசா கூறுகையில் : உண்மையிலேயே இந்த தொடரில் எங்களது அணியின் சார்பாக வேகப்பந்து வீச்சாளரான பிளசிங் முசரபாணி மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனாலும் நாங்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அதுவே நாங்கள் இந்த தொடரை இழக்க காரணம். இன்னும் பீல்டிங்கில் முன்னேற்ற வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த தொடரில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடத்தினை வைத்து எதிர்காலத்தில் நாங்கள் செய்யும் சில தவறுகளை திருத்த இந்த தோல்வி எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த தொடரில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் நாங்கள் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தோம். என்னுடைய பணிச்சுமையை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய வேலை இருக்கிறது. ஏனெனில் என்னுடைய தோள்பட்டை 100% முழு திறனுடன் இல்லை. எனக்கு சிறிய அளவிலான காயம் இருக்கிறது. எனவே நான் என்னுடைய பணிச்சுமையை கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட உள்ளோம். அதற்கு முன்னதாக நான் இன்னும் சில தினங்களில் "ஹண்ட்ரெட்" தொடருக்காக செல்ல உள்ளேன். அதன்பிறகு மீண்டும் ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.