2023 ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்க காரணம் இதுதான் - டிராவிட் பேட்டி


2023 ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்க காரணம் இதுதான் - டிராவிட் பேட்டி
x

image courtesy: AFP

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விடை பெற்றார்.

முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையை போலவே 2023 ஒருநாள் உலகக்கோப்பையிலும் இந்தியா விளையாடியதாக முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இருப்பினும் இறுதிப்போட்டியில் அதிர்ஷ்டம் இல்லாததால் தோல்வியை சந்தித்ததாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"2023 உலகக்கோப்பையில் எதையும் நான் வித்தியாசமாக செய்ய விரும்பவில்லை. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் அனைவரும் முழுமையான ஈடுபாட்டுடன் அற்புதமாக விளையாடினார்கள். அதை விட அந்தத் தொடருக்காக நாங்கள் இன்னும் சிறப்பாக தயாராகி, திட்டமிட்டு அதை செயல்படுத்தி விளையாடியிருக்க முடியாது. ஏனெனில் நாங்கள் விரும்பிய வழியில் விளையாடியதாலேயே தொடர்ந்து 10 வெற்றிகளை அதிரடியாக பெற்றோம். அதனால் அத்தொடரில் நான் எதையும் மாற்ற விரும்ப மாட்டேன்.

சொல்லப்போனால் அணி மீட்டிங்கில் இதைத் தாண்டி நம்மால் என்ன வித்தியாசமாக செய்ய முடியும்? என்று நாங்கள் பேசினோம். நாங்கள் அதே ஆற்றலுடன், அதே வேகத்தில், அதே சூழ்நிலையில் விளையாட விரும்பினோம். மேலும் அந்த நாளில் (இறுதிப்போட்டி) கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பினோம். இறுதிப் போட்டியிலும் நாங்கள் அசத்தினோம். இருப்பினும் அன்று ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. அதற்காக அவர்களுக்கு வாழ்த்துகள். அது விளையாட்டில் நடக்கும். அதுதான் விளையாட்டு" என்று கூறினார்.


Next Story