அணி தடுமாறியபோது நானும் பாண்ட்யாவும் போட்ட திட்டம் இதுதான் - சூர்யகுமார் யாதவ்


அணி தடுமாறியபோது நானும் பாண்ட்யாவும் போட்ட திட்டம் இதுதான் - சூர்யகுமார் யாதவ்
x

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பார்படாஸ்,

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரஷித் கான் மற்றும் பரூக்கி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளது. இந்திய தரப்பில் பும்ரா, அர்ஷ்தீப்சிங் தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்தியாவின் இந்த வெற்றிக்கு அதிரடியாக விளையாடி 53 (28) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை சூர்யகுமார் யாதவும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினர்.

இந்நிலையில் 90 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது இருவரும் ஒரே வேகத்தில் அடிப்போம் என்று பாண்ட்யாவிடம் சொன்னதாக சூர்யகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் இந்திய பேட்ஸ்மேன் என்பதில் பெருமை கொள்வதாக தெரிவிக்கும் அவர் தன்னுடைய திட்டம் பற்றி பேசியது பின்வருமாறு:-

"இதில் நிறைய கடின உழைப்பு மற்றும் செயல்முறைகள் உள்ளது என்று நினைக்கிறேன். என்னுடைய மனதில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இந்த விருதை நீங்கள் பவுலருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை. இந்த தொடரில் முதல் முறையாக ஆட்ட நாயகன் விருது பேட்ஸ்மேனுக்கு கிடைத்துள்ளது. இது போன்ற போட்டிகளில் நீங்கள் உங்களுடைய திட்டத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதைப் பின்பற்றி சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா வந்தபோது நாம் இருவரும் ஒரே எண்ணத்துடன் விளையாடுவோம் என்று சொன்னது நினைவிருக்கிறது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் அதிரடியாக விளையாடுவோம் என்று பேசிக்கொண்டு விளையாடினோம். அந்த வகையில் அழுத்தத்தை கொடுத்து கடைசியில் 181 ரன்கள் அடித்தது மகிழ்ச்சி" என்று கூறினார்.


Next Story