நாங்கள் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் இதுதான் - ஜிம்பாப்வே கேப்டன்


நாங்கள் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் இதுதான் - ஜிம்பாப்வே கேப்டன்
x

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தது.

ஹராரே,

ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான 3-வது ஆட்டம் ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி தோல்வியடைந்தது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 66 ரன்களும், கெய்க்வாட் 49 ரன்களும் அடித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ராசா, முஜரபானி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மயர்ஸ் 65 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சிக்கந்தர் ரசா கூறுகையில், "இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திக்க பீல்டிங் ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். எங்களது அணியின் பீல்டிங்கைப் பற்றி நான் பெருமையாக நினைத்தாலும் இன்று நாங்கள் 20 ரன்களுக்கு மேல் பீல்டிங்கில் விட்டுக் கொடுத்து விட்டோம். இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்துள்ளோம். இன்னும் பீல்டிங்கில் நாங்கள் தீர்க்க வேண்டிய குறைகள் நிறைய இருக்கின்றன.

அதனை தீர்க்க நினைக்கிறோம் கூடிய விரைவில் அதற்கான செயல்பாடுகளும் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் நிறைய துவக்க வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி பார்த்துள்ளோம். எந்த ஒரு வீரருமே அணிக்காக தங்களது பங்களிப்பை வழங்குவதுதான் அவர்களது பொறுப்பு. இளம் வீரர்கள் தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அனுபவ வீரர்கள் தவறு செய்யும் போது அதனை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறினார்.


Next Story