கிரிக்கெட்டில் இதுதான் என்னுடைய கடைசி தொடர் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் அறிவிப்பு


கிரிக்கெட்டில் இதுதான் என்னுடைய கடைசி தொடர் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் அறிவிப்பு
x

image courtesy: AFP

இவர் தற்போது கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ கடந்த 2004-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 91 டி20 போட்டிகள் என அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 161 போட்டியில் விளையாடியுள்ளார். இது தவிர்த்து உலகில் உள்ள பல்வேறு முன்னணி டி20 லீக் தொடர்களிலும் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார். தற்போது 40 வயதை எட்டியுள்ள பிராவோ ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து வெளியேறியிருந்தார்.

அதனை தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் சென்னை அணியில் விளையாடும்போதே ஓய்வு பெறுவதாக அறிவித்து ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறியிருந்தார். இவர் தற்போது கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் தனது கடைசி தொடராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் தற்போதைய கரீபியன் லீக் தொடர் இருக்கும் என்றும் இந்த தொடருடன்தான் ஓய்வு பெறுகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "கரீபியன் மக்களுக்கு முன் என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறேன். என்னுடைய பயணம் துவங்கிய இடத்திலேயே முடிய உள்ளதை நினைத்து மகிழ்ச்சி. இதுவரை நான் விளையாடிய அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.


Next Story