சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை மிகக்கச்சிதமாக புரிந்து வைத்துள்ளனர் - சி.எஸ்.கே வீரர்களை பாராட்டிய ஸ்ரேயாஸ்
சென்னை அணி வீரர்கள் இந்த மைதானத்தின் தன்மையை மிகக் கச்சிதமாக புரிந்து வைத்திருப்பதாலேயே அவர்களால் எளிதான வெற்றியை பெற முடிந்தது
சென்னை,
ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி சென்னையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்த போட்டியின் பவர்பிளேவில் நாங்கள் மிகச் சிறப்பாக தான் ஆட்டத்தை துவங்கினோம். ஆனாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை. மேலும் இந்த மைதானத்தின் சூழ்நிலையை கணித்து எங்களால் விளையாட முடியாமல் போனது.
பவர்பிளேவிற்கு பிறகு மைதானம் ரன் குவிக்க கடினமாக மாறியது. அதே வேளையில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் இந்த மைதானத்தின் சூழ்நிலைகளை நன்றாக கணித்துள்ளனர். அவர்களது பந்துவீச்சும் திட்டத்திற்கு ஏற்றார் போன்று இருந்ததால் எங்களது பேட்ஸ்மேன்களால் ரன்களை குவிக்க முடியாமல் போனது.
இந்த போட்டியில் 160 முதல் 170 ரன்கள் வரை அடித்திருந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததாலே முமென்டமும் மாறியது. சென்னை அணியின் வீரர்கள் இந்த மைதானத்தின் தன்மையை மிகக் கச்சிதமாக புரிந்து வைத்திருப்பதாலேயே அவர்களால் எளிதான வெற்றியை பெற முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.