பிரித்வி ஷா கம்பேக் கொடுக்க ஒரே வழி அதுதான் - வாசிம் அக்ரம் அட்வைஸ்
உள்ளூரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் பிரித்வி ஷா நல்ல வீரராக உருவெடுக்க முடியும் என்று வாசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கராச்சி,
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே 2018-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிக்கு பின்னர் அவர் இதுவரை இந்திய அணிக்கு திரும்பவில்லை. இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா வெகு விரைவாகவே பார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார்.
நடப்பு ஐ.பி.எல். சீசனிலும் 7 போட்டிகளில் வெறும் 185 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. அதனால் அவரை நீக்கிய டெல்லி நிர்வாகம் 22 வயதாகும் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க்கை ஓப்பனங்கில் களமிறக்கியுள்ளது. அந்த வகையில் இந்த வருடமும் பிரிதிவி ஷா சுமாராக செயல்பட்டு கம்பேக் கொடுக்க தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் பார்ட்டியில் ஈடுபடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி உள்ளூரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் பிரித்வி ஷா நல்ல வீரராக உருவெடுக்க முடியும் என்று வாசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த வருடம் அவரை நான் நெருக்கமாக பார்க்கவில்லை. ஆனால் அவர் அடிப்படைக்கு மீண்டும் செல்ல வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று பெரிய ரன்கள் குவிக்க வேண்டும். பார்ட்டியில் ஈடுபடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
தமக்குள் நிறைய கிரிக்கெட்டை வைத்துள்ள அவர் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாட வேண்டும். அங்கே நிறைய சதங்கள் அடித்து கம்பேக் கொடுப்பது மட்டுமே ஒரே வழியாகும். வேறு குறுக்கு வழி கிடையாது. தற்போதைக்கு அவர் நிறைய விளையாடி தன் மீது கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு பெற்ற பின் நீங்கள் எவ்வளவு பார்ட்டியில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். யாரும் கேட்க மாட்டார்கள்" என்று கூறினார்.