அஸ்வினின் ஓய்வுக்கு பின் அவரது இடத்திற்கு இந்த தமிழக வீரர்தான் சரியாக இருப்பார் - தினேஷ் கார்த்திக்


அஸ்வினின் ஓய்வுக்கு பின் அவரது இடத்திற்கு இந்த தமிழக வீரர்தான் சரியாக இருப்பார் - தினேஷ் கார்த்திக்
x

அஸ்வினின் ஓய்வுக்கு பின் அவரது இடத்தை யார் நிரப்புவார்? என்று தினேஷ் கார்த்திக்கிடம் கேட்கப்பட்டது.

சென்னை,

இந்திய அணியின் அனுபவ வீரரும் தமிழகத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரருமான 37 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள், 116 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி உள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். அதனால் அவரை இந்த தலைமுறையின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் தற்போது 37 வயதான அஸ்வின் தனது கெரியரில் இறுதி கட்டத்தில் உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் அஸ்வினின் ஓய்வுக்கு பின் அவரது இடத்தை யார் நிரப்புவார்? என்று முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இந்தியா நிச்சயமாக அடுத்த தலைமுறை ஆப் ஸ்பின்னரைத் தேடுகிறது. சமீபத்திய இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளில், புல்கித் நரங், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சரண்ஷ் ஜெயின் ஆகிய மூன்று ஆப் ஸ்பின்னர்களை இந்தியா முயற்சித்தது. இதில் வாஷிங்டன் சுந்தருக்கே அதிக வாய்ப்பு உள்ளது. அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவருக்குத்தான் அந்த தகுதி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.


Next Story