ரஞ்சி கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 435 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 435 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
சேலம்,
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்புடன் மோதியது. இந்த ஆட்டம் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 122 ரன்களுடனும், விஜய் சங்கர் 85 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விஜய் சங்கர் சதம் அடித்தார். அவர் 130 ரன்னில் ஜெசிந்தர் சிங் பந்து வீச்சில் போல்டு ஆனார். விஜய் சங்கர் முதல் தர கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். 5-வது விக்கெட்டுக்கு இந்திரஜித்-விஜய் சங்கர் இணை 281 ரன்கள் திரட்டியது. அடுத்து வந்த வீரர்கள் யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. நிலைத்து நின்று ஆடிய பாபா இந்திரஜித் 187 ரன்னில் (295 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.
தமிழக அணி முதல் இன்னிங்சில் 131.4 ஓவர்களில் 435 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது.