டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ரோகித் கூறியது என்ன..?


டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ரோகித் கூறியது என்ன..?
x

image courtesy: twitter/@BCCI

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்துகொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53 ரன்களும், பாண்ட்யா 40 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 20 ஓவர்களில் வெறும் 122 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "அனைத்தும் எப்படி சென்றது என்பதில் மகிழ்ச்சி. இப்போட்டியில் நாங்கள் என்ன விரும்பியமோ அது கிடைத்தது. புதிய மைதானத்தில் புதிய பிட்ச்சில் சூழ்நிலைகளை பயன்படுத்துவது முக்கியம். ரிஷப் பண்ட் 3-வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தோம். இன்னும் நாங்கள் எங்களுடைய முழுமையான பேட்டிங் வரிசையை களமிறக்கவில்லை.

முடிந்தளவுக்கு இந்த போட்டியில் அனைத்து வீரர்களையும் களமிறக்க முயற்சித்தோம். அர்ஷ்தீப் சிங் ஆரம்பக்கட்ட ஓவர்களிலும் கடைசிக்கட்ட ஓவர்களிலும் தன்னுடைய திறமையை காண்பித்தார். அவரிடம் நல்ல திறன் இருக்கிறது. எங்களிடம் 15 நல்ல வீரர்கள் இருக்கின்றனர். எனவே நாங்கள் வெற்றி பெறுவதற்கு சூழ்நிலைகளை சரியாக உணர்ந்து அதற்குத் தகுந்த சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story