டி20 உலகக்கோப்பை: இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு - விராட், ரோகித்தை எச்சரித்த முகமது கைப்


டி20 உலகக்கோப்பை: இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு - விராட், ரோகித்தை எச்சரித்த முகமது கைப்
x

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி டி20 உலகக்கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அமெரிக்காவுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதன் பின் ஜூன் 9ம் தேதி நியூயார்க் நகரில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்வது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 10 வருடங்களில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். ஆனால் ஐசிசி தொடர்களில் ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை. கடைசியாக தோனி தலைமையில் அவர்கள் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இளம் வீரர்களாக வென்றனர்.

அதன் பின் கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் விளையாடிய இந்த ஜோடி நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறது. இதில் ரோகித் சர்மாவாவது 2007 டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளார். ஆனால் விராட் கோலி 2014, 2016இல் தொடர்நாயகன் விருதுகளை வென்ற போதிலும் ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி டி20 உலகக்கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். ஏனெனில் 35 வயதை கடந்து விட்ட அவர்களுக்கு பதிலாக பிசிசிஐ இளம் வீரர்களை கொண்டு வந்து விடும் என்று கைப் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"தாம் நீண்ட காலம் விளையாட போவதில்லை என்பது ரோகித் சர்மாவுக்கு தெரியும். இன்னும் 2 - 3 வருடங்கள் மட்டுமே உள்ளன. விராட் கோலிக்கும் இதே நிலைதான். எனவே இது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி வாய்ப்பு. அவர்கள் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை பைனலில் தோல்வியை சந்தித்தனர்.

அத்தொடரில் சிறப்பாக விளையாடியும் கோப்பை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் இதயங்கள் உடைந்தன. ரசிகர்கள் நொறுங்கினர். இம்முறை லீக் சுற்றில் இந்தியாவுக்கு பெரியளவில் போட்டியில்லை. அரையிறுதி மற்றும் இறுதி ஆகிய 2 போட்டிகள் மட்டுமே இந்தியாவுக்கு கடினமாக இருக்கும். நீங்கள் அந்த 2 நாட்களுக்கு தயாராக இருக்கிறீர்களா? இதுவே ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சோதனையாகும்" என்று கூறினார்.


Next Story