டி20 உலகக்கோப்பை: 2 மீட்டர்தான்.. சூர்யகுமார் யாதவ் கேட்ச் குறித்து மனம் திறந்த ஜான்டி ரோட்ஸ்


டி20 உலகக்கோப்பை: 2 மீட்டர்தான்.. சூர்யகுமார் யாதவ் கேட்ச் குறித்து மனம் திறந்த ஜான்டி ரோட்ஸ்
x
தினத்தந்தி 2 Sep 2024 2:15 AM GMT (Updated: 2 Sep 2024 2:17 AM GMT)

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்து இன்னும் சில மீட்டர்கள் தாண்டி விழுந்திருந்தால் தென் ஆப்பிரிக்கா வென்றிருக்கும் என்று ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

கேப்டவுன்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.

ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் (5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்) விக்கெட்டை பாண்ட்யா கழற்றியது, 18-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே வழங்கி மிரட்டியது, இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (21 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாகவமாக சூர்யகுமார் பிடித்தது இப்படி திக்...திக்...திக் திருப்பங்களுடன் ஆட்டமும் இந்தியா பக்கம் சாய்ந்தது. 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் அடங்கி கோப்பையை கோட்டை விட்டது. சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் சூர்யகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அது கேட்ச் கிடையாது என்றும்,அது சிக்சர் என்றும் சமூக வலைதளங்களில் குறை கூறி வந்தனர். எல்லைக்கோடு கொஞ்சம் நகர்த்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பவுண்டரி லைனில் அச்சு மைதானத்தில் இருந்ததாகவும் கூறினர். இதில் சூர்யகுமார் யாதவ் கால் வைத்ததால் நியாயமாக இது சிக்சர் என்று அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் இந்த கேட்ச் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ள ஜான்டி ரோட்ஸ், டேவிட் மில்லர் அடித்த பந்து இன்னும் சில மீட்டர்கள் தாண்டி விழுந்திருந்தால் தென் ஆப்பிரிக்கா வென்றிருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் சூர்யகுமார் பிடித்த அபாரமான கேட்ச் தங்களது வெற்றியைப் பறித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"போட்டியை மாற்றக்கூடிய விஷயங்களை செய்யும் எங்களது வீரர்களையும் எதிரணியையும் நான் எப்போதும் மதிக்கிறேன். அங்கே எந்த கேரண்டியும் கிடையாது. அது சிக்சராக சென்றிருந்தால் மில்லர் தொடர்ந்து பேட்டிங் செய்து பந்துகளை மைதானத்திற்கு வெளியே அனுப்பியிருப்பார். இருப்பினும் அது கேட்சுகள் டி20 மேட்ச்களை வென்று கொடுக்கும் என்பதை காட்டியது. அத்தொடரில் இந்தியா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியது. தென் ஆப்பிரிக்கா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை. ஆனால் அவர்கள் உண்மையான போராளிகள் என்பதை காண்பித்தனர். இந்தியா தாங்கள் விளையாடிய விதத்தில் டாமினேட் செய்தது.

அப்போட்டியில் இரு அணிகளின் வெற்றிகள் 2 மீட்டர் தொலைவில் இருந்தது. அதைத் தாண்டியிருந்தால் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக மாறியிருக்கும். எனவே அது கலவையான உணர்வுகளை கொடுத்தது. இருப்பினும் அது ஒரு பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புள்ளவரான எனக்கு ஆட்டத்தை மாற்றும் தருணமாக அமைந்ததில் மகிழ்ச்சியடைந்தேன்" என்று கூறினார்.


Next Story