டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் தோல்வி அடைந்திருந்தாலும் இந்தியாவை பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்


டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் தோல்வி அடைந்திருந்தாலும் இந்தியாவை பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்
x

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அரையிறுதி சுற்றோடு வெளியேறியுள்ளது.

கயானா,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதன் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து, நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதத்தின் மூலம் 171 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 16.4 ஓவர்களிலேயே 103 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்த இங்கிலாந்து கோப்பையை தக்கவைக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. முன்னதாக இந்த ஆட்டத்தினிடையே மழை அடிக்கடி குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இந்தியாவை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "இந்தியா உண்மையிலேயே இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் நாங்கள் 20 முதல் 25 ரன்கள் வரை அவர்களுக்கு கூடுதலாக வழங்கி விட்டோம். அதேபோன்று இந்த சவாலான மைதானத்திலும் அவர்கள் உண்மையிலேயே எங்கள் அணியை மிஞ்சும் அளவிற்கு மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார்கள்.

இந்த மைதானம் மிகவும் கடினமாக இருந்தது. அவ்வப்போது மழையும் பெய்தது இப்படி ஒரு சூழலில் இந்திய அணி விளையாடிய விதம் உண்மையிலேயே இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான் என்று காண்பிக்கிறது. அனைத்து துறைகளிலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டு விட்டது. எங்களது அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசியிருந்தார்கள். இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்" என்று கூறினார்.


Next Story