டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் - பப்புவா நியூ கினியா இன்று மோதல்


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் - பப்புவா நியூ கினியா இன்று மோதல்
x

image courtesy: Windies Cricket twitter

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியாவுடன் மோதுகிறது.

கயானா,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று தொடங்கியது.

வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணியும், 'சி' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணியும், 'டி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணியும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்குள் நுழையும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியாவை சந்திக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை முழுமையாக (3-0) கைப்பற்றியது. அத்துடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 257 ரன்கள் குவித்ததுடன் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த உற்சாகத்துடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களம் இறங்குகிறது. உள்ளூர் சூழல் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

பப்புவா நியூ கினியா அணி கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றில் வெற்றி கண்டு 2-வது முறையாக இந்த போட்டியில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. வலுவான வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடியை, பப்புவா நியூ கினியா தாக்குப்பிடிப்பது என்பது எளிதான காரியமில்லை. 20 ஓவர் சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

வெஸ்ட்இண்டீஸ்: ரோமன் பவெல் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ஹெட்மயர், ஷாய் ஹோப், பிரன்டன் கிங், நிகோலஸ் பூரன், ஷெர்பானி ரூதர்போர்டு, ரோஸ்டன் சேஸ், ஆந்த்ரே ரஸ்செல், ரொமாரியோ ஷெப்பர்டு, ஜாசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், அகீல் ஹூசைன், ஷமார் ஜோசப், ஒபெட் மெக்காய், குடகேஷ் மோட்டி.

பப்புவா நியூ கினியா: ஆசாத் வாலா (கேப்டன்), செசி பா, கிப்ளின் தொரிகா, ஹிரி ஹிரி, லீகா சீகா, டோனி அரா, ஹிலா வரே, சார்லஸ் அமினி, ஜாக் கார்ட்னர், சீமோ கமி, ஜான் காரிகோ, காபா மோரே, ஆலி நாவோ, சாட் சோபர், நார்மன் வானா.

வெஸ்ட்இண்டீசில் உள்ள பிரிட்ஜ் டவுனில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் நமிபியா-ஓமன் அணிகள் சந்திக்கின்றன. உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை இந்திய நேரப்படி மறுநாள் காலை 6 மணிக்கு தான் பார்க்க முடியும். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story