டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் சூர்யகுமார் யாதவை தாண்டி 3-வது இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்


டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில்  சூர்யகுமார் யாதவை தாண்டி 3-வது இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நிக்கோலஸ் பூரன் 65 ரன்கள் குவித்தார்.

டிரினிடாட்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிரடியாக ஆடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போர்டே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிக் அத்தானஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அலிக் அத்தானஸ் 40 ரன்னிலும், ஹோப் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் புகுந்த பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பூரன் 26 பந்தில் 7 சிக்சர்கள் உட்பட 65 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் நிக்கோலஸ் பூரன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவை தாண்டி 3-வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மா உள்ளார்.

அந்த பட்டியல்:

1. ரோகித் சர்மா - 205 சிக்சர்கள்

2. மார்ட்டின் கப்தில் - 173 சிக்சர்கள்

3.நிக்கோலஸ் பூரன் - 139 சிக்சர்கள்

4.ஜோஸ் பட்லர் - 137 சிக்சர்கள்

5.சூர்யகுமார் யாதவ் - 136 சிக்சர்கள்


Next Story