ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி ஆட்டத்தில் ஆடாதது ஆச்சரியம் அளிக்கிறது..!! - சுரேஷ் ரெய்னா
பயிற்சி ஆட்டங்கள் முக்கியமானவை, ஆஸ்திரேலிய அணியினர் விளையாடி இருக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
புதுடெல்லி,
போலீஸ் குடும்ப நல சங்கம் சார்பில் டெல்லியில் நடந்த ஒலிம்பிக் மிஷன் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நிருபர்களிடம் பேசுகையில், 'இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி ஆட்டத்தில் ஆடாதது ஆச்சரியம் அளிக்கிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நான் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி இருக்கிறேன். பயிற்சி ஆட்டங்கள் முக்கியமானவை. இந்தியாவில் உள்ள ஆடுகளத்தின் தன்மை குறித்து அறிய வேண்டுமானால் ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி இருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், அக்ஷர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். இதனால் இந்த தொடர் சுவராஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைத்து வடிவிலான போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படுவது சாதனையாகும். பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பது சிறப்பானதாகும். இதனை வரவேற்கிறேன். இது நமது நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு நல்ல பலனை அளிக்கும்' என்று தெரிவித்தார்.