முதல் பந்திலேயே சிக்சர் - சமீர் ரிஸ்வியிடம் இயற்கையாகவே அதிரடியாக விளையாடும் திறமை உள்ளது - மைக்கேல் ஹஸ்ஸி
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
சென்னை,
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 51 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலத்தின் போது சென்னை அணி சமீர் ரிஸ்வி என்ற இளம் வீரரை 8 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
ஒரு இளம் வீரருக்கு இவ்வளவு பெரிய தொகையை சி.எஸ்.கே அணி வழங்கியது மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து நடப்பு ஐ.பி.எல்.தொடரில் சென்னை அணி ஆடிய 2 போட்டிகளிலும் ரிஸ்வி ஆடும் லெவனில் இடம் பெற்றிருந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறாத ரிஸ்வி நேற்று நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது 6 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்களுடன் 14 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக களமிறங்கிய முதல் பந்திலேயே ரஷீத் கான் பந்துவீச்சில் சிக்சர் அடித்து அசத்தினார். அதோடு அந்த ஓவரின் இறுதிப்பந்திலும் சிக்ஸ் அடித்த அவர் மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் அவரது இந்த மிகச் சிறப்பான பேட்டிங்கை பாராட்டியுள்ள சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி சமீர் ரிஸ்வியின் ஆட்டம் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இயற்கையாகவே அவரிடம் அதிரடியாக விளையாடும் திறமை உள்ளது. பயிற்சியின்போது அவரை கவனித்தோம். ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் மிகச் சிறப்பான அட்டாக்கிங் பேட்டிங்கை மேற்கொள்கிறார்.
அதோடு அவரால் பந்தை சரியாக டைம் செய்ய முடிகிறது. அதனால் பெரிய ஷாட்களையும் விளையாட முடிகிறது. டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய பவுலரான ரஷீத் கானுக்கு எதிராக முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஒருவர் அட்டாக் செய்ய வேண்டுமெனில் அதற்கு தனி தைரியம் வேணும். அந்த வகையில் ரிஸ்வியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அவர் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட ஆர்வமாக காத்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கூட பயமில்லை அதன் காரணமாகவே அவரால் சுதந்திரமாக விளையாட முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.