ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஷ்ரேயாஸ் விலகல்..? - சூர்யகுமார் யாதவ் இடம்பெற வாய்ப்பு...!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
நாக்பூர்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானால் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.