ஷிவம் சிங் அதிரடி; நெல்லைக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் 185 ரன்கள் குவிப்பு...!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஷிவம் சிங் 76 ரன்கள் அடித்தார்.
நெல்லை,
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி மதுரை பாந்தர்சை வீழ்த்தி 2வது குவாலிபயர் ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் ஆடி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விமல் குமார், ஷிவம் சிங் ஆகியோர் களம் இறங்கி9னர். இதில் விமல் குமார் 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஷிவம் சிங்குடன் பூபதி குமார் இணைந்தார். இந்த இணை நெல்லையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
அதிரடியாக ஆடிய இவர்களால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் பூபதி குமார் 28 பந்தில் 41 ரன் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் ஷிவம் சிங் 37 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ஆதித்ய கணேஷ் ஷிவம் சிங்குடன் இணைந்தார்.
அதிரடியில் மிரட்டிய ஷிவம் சிங் 46 பந்தில் 76 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஆதித்ய கணேசுடன் சரத் குமார் ஜோடி சேர்ந்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஆட உள்ளது.