இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக இவர் விளையாடலாம்: சொல்கிறார் ஷேன் வாட்சன்
டி20 உலகக்கோப்பையில் பும்ரா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் மாற்றுவீரரை ஷேன் வாட்சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
மெல்போர்ன்,
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா முதுகுவலி காயம் காரணமாக விலகியதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பும்ராவுக்கு பதில் மாற்று வீரராக சிராஜை சேர்க்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, பும்ரா இந்திய அணியில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை நான் சிராஜை தேர்ந்தெடுப்பேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் முக்கியமானது.
புதிய பந்தில் சிராஜ் சிறந்தவர். கடந்த இரண்டு வருடமாக ஐபிஎல்லில் அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். அவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய மைதானங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், பும்ரா இல்லாத இந்திய அணியால் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் வாட்சன் தெரிவித்துள்ளார்.