டி20 உலகக்கோப்பைக்கு பின் ரோகித், விராட் அணியில் வேண்டாம் - யுவராஜ் சிங்


டி20 உலகக்கோப்பைக்கு பின் ரோகித், விராட் அணியில் வேண்டாம் - யுவராஜ் சிங்
x
தினத்தந்தி 27 April 2024 9:11 AM IST (Updated: 27 April 2024 9:17 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அணிக்கு ஆற்றிய பங்கிற்காக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தாங்கள் விரும்பும் நேரத்தில் ஓய்வு பெறும் உரிமையை கொண்டுள்ளார்கள் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) சமர்ப்பிக்க மே 1-ந் தேதி கடைசி நாளாகும். தொடக்க அணியில் வீரர்களை மே 25-ந் தேதி வரை மாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வரும் 28-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அணியில் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களை தேர்வு செய்யக்கூடாது என்று சில கருத்துகள் காணப்படுகின்றன.

அந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். எனவே ஸ்லோவான பிட்சுகளைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் 2024 டி20 உலகக்கோப்பையில் அவரை தேர்வுக் குழு கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்திய அணிக்கு ஆற்றிய பங்கிற்காக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தாங்கள் விரும்பும் நேரத்தில் ஓய்வு பெறும் உரிமையை கொண்டுள்ளார்கள் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் 2024 டி20 உலகக்கோப்பைக்கு பின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களை கழற்றி விடப்பட்டு முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று யுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "உங்களுக்கு வயதாகும்போது மக்கள் உங்களுடைய வயதைப் பற்றி பேச துவங்குவார்கள். உங்களுடைய பார்மை பற்றி மறந்து விடுவார்கள். அவர்கள் (விராட், ரோகித்) இந்தியாவுக்காக விளையாடிய மகத்தான வீரர்கள். எனவே அவர்கள் விரும்பும்போது ஓய்வு பெறுவதற்கு தகுதியுடையவர்கள். இருப்பினும் டி20 பார்மட்டில் நான் நிறைய இளம் வீரர்களை பார்க்க விரும்புகிறேன்.

ஏனெனில் அது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடும் அனுபவ வீரர்களின் மீதான அழுத்தத்தை குறைக்கும். எனவே இந்த டி20 உலகக்கோப்பை முடிந்ததும் இந்திய அணிக்குள் நிறைய இளம் வீரர்கள் வருவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர்களை வைத்து அடுத்த உலகக்கோப்பைக்கான டி20 அணியை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story