சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா..!
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தூர்,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் களம் இறங்கிய ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் (134 ஆட்டம்), அயர்லாந்தின் டாக்ரெல் (128 ஆட்டம்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (124 ஆட்டம்), நியூசிலாந்தின் மார்டின் கப்தில் (122 ஆட்டம்) உள்ளனர்.
இந்திய வீரர்களில் ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக விராட் கோலி (116 ஆட்டம்), தோனி (98 ஆட்டம்), ஹர்திக் பாண்ட்யா (92 ஆட்டம்), புவனேஷ்வர் குமார் (87 ஆட்டம்) உள்ளனர்.