ரோகித் சர்மா தான் எனக்கு வழிகாட்டி -திலக் வர்மா


ரோகித் சர்மா தான் எனக்கு வழிகாட்டி -திலக் வர்மா
x
தினத்தந்தி 7 Aug 2023 8:33 PM GMT (Updated: 8 Aug 2023 12:01 PM GMT)

ரோகித் சர்மா தனது ஆட்டத்தின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருக்கிறார் என திலக் வர்மா கூறியுள்ளார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் மூலம் தனது சர்வதேச பயணத்தை தொடங்கிய இந்திய இளம் வீரர் திலக் வர்மா முதல் ஆட்டத்தில் 39 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 51 ரன்களும் எடுத்து கவனத்தை ஈர்த்தார். ஆந்திராவைச் சேர்ந்த 20 வயதான திலக் வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது இரு ஐ.பி.எல். தொடர் (மும்பை அணிக்காக) தான் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை என்பது எல்லோருக்கும் தெரியும். நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட்டதே காரணம். அதில் பெற்ற நம்பிக்கையுடன் சர்வதேச போட்டியில் விளையாடுகிறேன். எனது முதல் ஐ.பி.எல். போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, 'நீ மூன்று வடிவிலான போட்டிக்குரிய வீரர்' என்று சொன்னார். அவரது வார்த்தை எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும், நிறைய நம்பிக்கையும் தந்தது. எனது ஆட்டத்தின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருக்கிறார். நான் சர்வதேச போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் வழிகாட்டியாக இருக்கிறார். அவரிடம்இருந்து நிறைய கற்றுள்ளேன்.

19 வயதுக்குட்டோருக்கான போட்டியில் இருந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் பழகுகிறேன். அவர் எப்போதும், 'அடிப்படை விஷயங்களை சரியாக செய், முடிந்த வரை களத்தில் நீண்ட நேரம் நிற்பதில் கவனம் செலுத்து, உனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடு' என்று சொல்வார். ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசும் போதும் அவரும் ஐ.பி.எல். மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் நன்றாக ஆடியிருக்கிறாய். அதே போன்று சர்வதேச போட்டியிலும் விளையாடு, உனது ஆட்டத்தை ரசித்து செய் என்று சொன்னார்.

எனது முதலாவது சர்வதேச அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகள் சமைராவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் தான் களத்தில் அவளுக்கு பிடித்த மாதிரி சைகை காட்டினேன். சமைராவுடன் நான் எப்போதும் ஜாலியாக விளையாடுவேன். அப்போது எனது முதல் சர்வதேச சதம் அல்லது அரைசதத்தை அவளுக்காக கொண்டாடுவேன் என்று கூறியிருந்தேன். அதன்படியே செய்தேன்.

இவ்வாறு திலக் வர்மா கூறினார்.


Next Story