சர்வதேச கிரிக்கெட்டில் நான் அசத்துவதற்கு ரோகித் சர்மாவும் முக்கிய பங்காற்றியுள்ளார் - ஷிகர் தவான்
டாப் ஆர்டரில் இந்திய அணிக்கு வலுவான துவக்கத்தை கொடுப்பதற்கு ரோகித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் தங்க பேட் விருது வென்று அசத்தினார். மேலும் இந்திய அணி 2-வது இடம்பிடித்த 2017-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் தங்க பேட் விருது வென்று அசத்தினார்.
அப்போதிலிருந்து 2019 உலகக்கோப்பை வரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடியாக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்தனர். மேலும் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (5148) பார்ட்னர்ஷிப் அமைத்த 2-வது இந்திய ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்துள்ளார்கள்.
இருப்பினும் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து தவான் வெளியேறினார். அதிலிருந்து மீண்டு வந்த பின் பழைய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறிய அவருக்கு கில், ஜெய்ஸ்வால் போன்ற ஏராளமான இளம் வீரர்கள் போட்டிக்கு வந்து விட்டனர். அதனால் 2023 உலகக்கோப்பையில் கழற்றி விட்டப்பட்ட அவரின் கெரியரும் முடிந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தாம் இந்தியாவுக்காக அசத்துவதற்கு ரோகித் சர்மாவும் முக்கிய பங்காற்றி உதவியதாக தவான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "டாப் ஆர்டரில் இந்திய அணிக்கு வலுவான துவக்கத்தை கொடுப்பதற்கு ரோகித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக அது பெரிய ஸ்கோர் அடிப்பதற்கும் இலக்கை துரத்துவதற்கும் நல்ல அடித்தளத்தை கொடுத்தது. அந்த வகையில் என்னுடைய நிறைய சிறந்த செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை நான் ரோகித் சர்மாவுக்கு நிச்சயம் கொடுப்பேன்.
ஏனெனில் எதிர்ப்புறம் ரோகித் சர்மா எனக்கு சவுகரியத்தையும் உறுதியையும் கொடுப்பார். 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களின் சிறந்த இன்னிங்ஸ். அதற்கு அடுத்தபடியாக 2018 ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் முதல் விக்கெட்டுக்கு நாங்கள் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததாகும்" என்று கூறினார்.