ரோகித் கூறுவது சரிதான்.. அந்த விதிமுறை ஆல் ரவுண்டர்கள் வளர்வதை தடுக்கிறது - ஜான்டி ரோட்ஸ்


ரோகித் கூறுவது சரிதான்.. அந்த விதிமுறை ஆல் ரவுண்டர்கள் வளர்வதை தடுக்கிறது - ஜான்டி ரோட்ஸ்
x

இம்பேக்ட் வீரர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் வளர்வதை தடுப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

கேப்டவுன்,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை தக்க வைக்க கோரிக்கை வைத்தன.

முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது இம்பேக்ட் வீரர் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் வளர்வதில் பிரச்சினை ஏற்படுவதாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். அத்துடன் விராட் கோலி முதல் டேவிட் மில்லர் வரை பலரும் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ரோகித் சர்மா கூறியதுபோல இம்பேக்ட் வீரர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் வளர்வதை தடுப்பதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இம்பேக்ட் வீரர் விதிமுறையை சரியாக பயன்படுத்துவதில் என்னை நான் பின்தொடர்கிறேன். ஏனென்றால் அதனால் வீரர்கள் சுதந்திரத்துடன் விளையாடுகின்றனர். இருப்பினும் அந்த விதிமுறையால் ஒரு ஆல் ரவுண்டரின் பாத்திரம் பாழாவது பற்றி நான் கவலைப்படுகிறேன். அது மிகவும் எளிதான வேலை. ஆனால் அது டெஸ்ட், ஒருநாள், டி20 போன்ற அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மிகவும் முக்கியமான பங்கை செய்கிறது. எனவே நான் இம்பேக்ட் வீரர் விதிமுறையின் மிகப்பெரிய ரசிகன் அல்ல.

வேண்டுமானால் நான் அந்த விதிமுறையை எப்போது சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரியாத நபராக இருக்கலாம். ஆனால் வீரரை அனுப்புவது என்னுடைய வேலை அல்ல. எனவே நான் அதை நினைத்து கவலைப்படவில்லை. நான் எப்போதும் போட்டிக்கு தகுந்தாற்போல் என்னை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளேன். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்களின் பங்கை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இம்பேக்ட் வீரர் விதிமுறை கிட்டத்தட்ட அதைக் கொல்கிறது" என்று கூறினார்.


Next Story