துலீப் கோப்பை: விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு.. ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு
துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையி 2024 -25 சீசன் தொடங்கியுள்ளது. இதன் முதலாவது சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த தொடரில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர். இதனால் அவர்கள் 2-வது சுற்றிலிருந்து விலகியுள்ளனர். சர்பராஸ் கான் தேர்வாகியிருந்தபோதும் 2-வது சுற்றில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா பி அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால், பண்ட் மற்றும் யாஷ் தயாள் ஆகியோருக்கு பதிலாக ரிங்கு சிங், சுயாஷ் பிரபுதேசாய் மற்றும் ஹிமான்ஷு மந்த்ரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள்னர்.
இந்தியா ஏ அணியின் கேப்டனாக இருந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக பிரதாம் சிங் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் கே.எல். ராகுலுக்கு பதிலாக அக்ஷய் வாட்கரும், ஜூரலுக்கு பதிலாக எஸ்.கே.ரஷீத்தும், குல்தீப்புக்கு பதிலாக ஷாம்ஸ் முலானியும், ஆகிப் கானுக்கு பதிலாக ஆகாஷ் தீப்பும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா டி அணியில் ஒரே மாற்றமாக அக்சர் படேலுக்கு பதிலாக நிஷாந்த் சந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா சி அணியில் மாற்றமில்லை.