ரிங்கு சிங் சிறப்பாக செயல்படுவதற்கு முன்னாள் இந்திய வீரர் கொடுத்த ஆதரவுதான் காரணம் - தினேஷ் கார்த்திக்


ரிங்கு சிங்  சிறப்பாக செயல்படுவதற்கு முன்னாள் இந்திய வீரர் கொடுத்த ஆதரவுதான் காரணம் - தினேஷ் கார்த்திக்
x

image courtesy; AFP

இந்த ஆட்டத்தில் பினிஷிங் செய்த ரிங்கு சிங்கை களத்தில் வர்ணனையாளராக இருந்த அபிஷேக் நாயர் நேரடியாக மைதானத்திற்கு சென்று கட்டிப்பிடித்து பாராட்டினார்.

விசாகப்பட்டினம்,

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதலாவது ஆட்டத்தியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் சதம் (110) அடித்தார். பின்னர் விளையாடிய இந்தியா அணி இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் 19.5 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் 7 ரன் தேவையாக இருந்தது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசினார். முதல் பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் உதிரியாக ஒரு ரன் வந்தது. 3-வது பந்தில் அக்ஷர் பட்டேல் (2 ரன்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4-வது பந்தில் ரவி பிஷ்னோய் ரன்-அவுட் ஆனார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடுகையில் அர்ஷ்தீப் சிங் ரன்-அவுட்டில் சிக்கினார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங் பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அது 'நோ-பால்' என்று நடுவர் அறிவித்ததால் அந்த சிக்சருக்கு உரிய ரன் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை. நோ பாலுக்குரிய ஒரு ரன் வந்தது.

19.5 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. ரிங்கு சிங் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படுவதற்கு முன்னாள் இந்திய வீரர் அபிஷேக் நாயர் கொடுத்த தொடர்ச்சியான ஆதரவுதான் காரணம் என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். இந்த ஆட்டத்தில் பினிஷிங் செய்த ரிங்கு சிங்கை களத்தில் வர்ணனையாளராக இருந்த அபிஷேக் நாயர் நேரடியாக மைதானத்திற்கு சென்று கட்டிப்பிடித்து பாராட்டினார்.

அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தினேஷ் கார்த்திக் இது குறித்து கூறியது பின்வருமாறு;-

"இது மிகவும் நிறைவான இதயத்தை வெளிப்படுத்தும் படங்களில் ஒன்றாகும். ரிங்கு சிங் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோரிடையே இருக்கும் பார்ட்னர்ஷிப் 2018 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் என்னுடைய நேரத்தில் துவங்கியது. குறிப்பாக ரிங்குவிடம் நல்ல திறமை இருப்பதை பார்த்த அபிஷேக் நாயர் எப்போதும் அவரிடம் நீங்கள் ஏதோ ஸ்பெஷலாக செய்வதற்கு சிறிது காலம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அபிஷேக் நாயர் டெத் ஓவர்களில் அசத்தும் திறமையை ரிங்குவிடம் வளர்த்தார். ஐபிஎல் முடிந்து காயத்திலிருந்து குணமடைவதற்காக ரிங்கு பல நாட்கள் நாயர் வீட்டில் தங்கியுள்ளார். நாயர் மற்றும் கொல்கத்தா அணி நிர்வாகம் ரிங்கு மேட்ச் வின்னிங் பினிஷராக வரவேண்டும் என்பதை விரும்பினார்கள். இன்று நாயர் ஒரு பயிற்சியாளராக முன்னேறி ரிங்குவை இந்த உலகத்துடன் சேர்ந்து பார்க்கிறார். சிறப்பாக செயல்பட்டீர்கள் அபிஷேக் மற்றும் ரிங்கு" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story