இந்திய அணிக்கு திரும்பியதை மறுபிறப்பு போல உணர்கிறேன் - வருண் சக்கரவர்த்தி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
குவாலியர்,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று தொடங்கியது.
நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 11.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அணிக்குள் திரும்புவது உணர்வுபூர்வமானது. மீண்டும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிவதில் மகிழ்ச்சி. இதை மறுபிறப்பு போல உணர்கிறேன். வழக்கமாக நான் கடைபிடிக்கும் அதே செயல்முறையை பின்பற்றுகிறேன்.
அடுத்து என்ன என்பது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை. கடந்த ஐ.பி.எல் சீசனுக்கு பிறகு நான் சில தொடர்களில் விளையாடி இருந்தேன். அதில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரும் அடங்கும். அது தரமான தொடர். அந்த தொடரில் அஸ்வின் உடன் இணைந்து பயணித்தது எனக்கு பலன் தந்தது. அதில் நாங்கள் பட்டமும் வென்றோம். இந்த தொடருக்கு நான் சிறந்த முறையில் தயாராக எனக்கு அது கைகொடுத்தது.
இந்திய அணியில் வாய்ப்பு பெற உயர்ந்த செயல்திறன் அவசியம். அதுதான் வாய்ப்புக்கான கதவை தட்டும் வழியும் கூட. தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.