"எங்கள் கடின உழைப்பின் பலன்..." - முதல் இடத்திற்கு முன்னேறியது குறித்து பாகிஸ்தான் கேப்டன் கருத்து


எங்கள் கடின உழைப்பின் பலன்... - முதல் இடத்திற்கு முன்னேறியது குறித்து பாகிஸ்தான் கேப்டன் கருத்து
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 27 Aug 2023 11:08 PM IST (Updated: 28 Aug 2023 1:11 AM IST)
t-max-icont-min-icon

தங்கள் அணியினரின் கடின உழைப்பின் பலனாக முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை (118 புள்ளி) நூலிழை வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் (118 புள்ளி) முதலிடத்தை பிடித்தது. இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், 'எப்போதெல்லாம் நீங்கள் 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்கிறீர்களோ அது அளவில்லா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும். இது பயிற்சியாளர் உள்பட ஒட்டுமொத்த அணியினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு. இதற்கு முன்பும் நாங்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஆட்டத்திலேயே தோற்று அந்த இடத்தை இழந்துள்ளோம்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தோடு ஆசிய போட்டிக்கு செல்கிறோம். சிலர் நினைப்பது போல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்வது எளிதான விஷயம் அல்ல. அவர்கள் சுழற்பந்து வீச்சில் எவ்வளவு வலுவானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த தொடரில் பெற்ற உத்வேகம் ஆசிய கிரிக்கெட்டில் எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். எங்கள் ரசிகர்களுக்காக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்' என்றார்.

இந்த தொடரை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் வீரர்கள் நேற்று கொழும்பில் இருந்து சொந்த நாட்டிக்கு திரும்பினர். வருகிற 30-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறுகிறது. 30-ந்தேதி முல்தானில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்-. -நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே, ஆசிய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் தயாப் தாஹிருக்கு பதிலாக பேட்ஸ்மேன் சாத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story