6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரீஸ் டாப்லே: 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி


6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரீஸ் டாப்லே: 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
x

Image Courtacy: ICCTwitter

2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் களமிறங்கினர். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா பந்துவீச்சில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். அவர் தொடர்ந்து ரூட் களமிறங்கினார். டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த ரூட்- பேர்ஸ்டோவ் இன்று சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைக்க தவறினர். பேர்ஸ்டோவ் 38 ரன்களிலும் ரூட் 11 ரன்கள் எடுத்தும் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. இருப்பினும் பின் வரிசையில் லிவிங்ஸ்டோன் (33) மொயின் அலி (47) இருவரும் மோசமான ஸ்கோரில் இருந்து அணியை மீட்கும் வகையில் பங்களிப்பை அளித்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 49 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதை அடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ரோகித் சர்மா (0) ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து ஷிகார் தவான் 9 ரன்னிலும், ரிஷப் பந்த் (0) ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 16 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 27 (29) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஹர்திக் பாண்ட்டியாவுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியின் ரன்ரேட்டை சீராக உயர்த்தி வந்தனர். இந்த ஜோடியில் ஹர்திக் பாண்டியா 29 (44) ரன்களில் கேட்ச் அகி வெளியேறினார்.

அடுத்ததாக ஜடேஜாவுடன் முகமது சமி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன் சேர்த்து வந்த சமி 23 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஜடேஜாவும் 29 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிங்கிய சாஹல் 1 ரன்னும், பிரசித் கிருஷ்ணா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

முடிவில் பும்ரா 2 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 38.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லே 6 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி, மொயின் அலி, லிவிங்ஸ்டன் மற்றும் கார்சே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.


Next Story