ஆர்.சி.பி. அணியிலிருந்து யாரையாவது நீக்க வேண்டுமென்றால், அது அவராகத்தான் இருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
நடப்பு சீசனில் ஆர்.சி.பி. அணி வீரர் மேக்ஸ்வெல் ஒரு போட்டியில் கூட குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 10 அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனில் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனிவரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. நடப்பு சீசனில் ஆர்.சி.பி. அணி வீரர் மேக்ஸ்வெல் ஒரு போட்டியில் கூட குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், "அடுத்த போட்டியில் ஆர்சிபி அணியில் இருந்து யாரையாவது நீக்க வேண்டுமென்றால், அது மேக்ஸ்வெல்லாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மேக்ஸ்வெல்லால் ரன்களையும் சேர்க்க முடியவில்லை. பவுலிங்கில் விக்கெட்டும் வீழ்த்த முடியவில்லை. அவரது இடத்தில் வேறு வீரர்கள் களமிறங்கினால், நிச்சயம் சில ரன்களையாவது சேர்ப்பார்கள்" என்று விமர்சித்துள்ளார்.