டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்கும் ரஷித் கான்- காரணம் என்ன...?
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் (வயது 25). இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக இதுவரை 5 டெஸ்ட், 103 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் உலகெங்கிலும் நடைபெறும் டி20 தொடர்களிலும் ரஷித் கான் ஆடி வருகிறார்.
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் (செப்டம்பர் 9 முதல் 13 வரை) நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் இடம் பெறவில்லை. காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இடம் பெறவில்லை என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், ரஷித் கான் அடுத்த ஆறு முதல் ஓராண்டு காலத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷித் கானுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அடுத்த ஆறு முதல் ஓராண்டு காலத்திற்கு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.