ரஞ்சி டிராபி காலிறுதி; தமிழகம் அபார பந்துவீச்சு - சவுராஷ்டிரா 183 ரன்களில் ஆல் அவுட்


ரஞ்சி டிராபி காலிறுதி; தமிழகம் அபார பந்துவீச்சு - சவுராஷ்டிரா 183 ரன்களில் ஆல் அவுட்
x

Image Courtesy: @TNCACricket

தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கோவை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. இதில் 3வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெவின் ஜிவ்ரஜனி மற்றும் ஹர்விக் தேசாய் ஆகியோர் களம் இறங்கினர். இதில் தேசாய் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

இதில் கெவின் ஜிவ்ரஜனி 0 ரன், அடுத்து களம் இறங்கிய ஜாக்சன் 22 ரன், புஜாரா 2 ரன், வாசவதா 25 ரன், பிரேரக் மன்கட் 35 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்விக் தேசாய் அரைசதம் அடித்த நிலையில் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் வெறும் 77.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த சவுராஷ்டிரா அணி தனது முதல் இன்னிங்சில் 183 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 10 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story