ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த சர்பராஸ் கான் சகோதரர்


ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த சர்பராஸ் கான் சகோதரர்
x

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை - விதர்பா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை - விதர்பா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் மும்பை 224 ரன்னும், விதர்பா 105 ரன்னும் எடுத்தன.

119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 130.2 ஓவர்களில் 418 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் விதர்பா அணிக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி தரப்பில் முஷீர் கான் 136 ரன்கள் அடித்து அசத்தினார்.

விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

வலுவான நிலையில் இருக்கும் மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வெல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் சர்பராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது, 19 வயதான முஷீர் கான் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த மும்பை வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார். இதற்கு முன்பு 1994-95-ம் ஆண்டு ரஞ்சி இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக டெண்டுல்கர் தனது 21 வயதில் சதம் அடித்ததே (140, 139 ரன்கள்) இந்த வகையில் சாதனையாக இருந்தது.


Next Story