ரஞ்சி டிராபி கிரிக்கெட்; 50 விக்கெட்டுகளை கடந்து சாய் கிஷோர் சாதனை


ரஞ்சி டிராபி கிரிக்கெட்; 50 விக்கெட்டுகளை கடந்து சாய் கிஷோர் சாதனை
x

Image Courtesy: @BCCIdomestic

ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதி வருகின்றன.

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி மும்பையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முடிவில் தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்டது. மும்பை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 100 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 353 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி தற்போது வரை 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார். தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மும்பை தரப்பில் தனுஷ் கோட்யான் 74 ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

தமிழக அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான சாய் கிஷோர் நேற்று எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து நடப்பு தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்தது. இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது, ஒரு ரஞ்சி சீசனில் 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய 3-வது தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு வெங்கட்ராகவன் (58 விக்கெட், 1972-73-ம் ஆண்டு), ஆஷிஷ் கபூர் (50 விக்கெட், 1999-00) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர்.


Next Story